அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு - அக் 30ந் தேதிக்கு ஒத்திவைப்பு

Wednesday 26, September 2018, 14:20:08

தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க கொறடா சக்கரபாணி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு ஆகியவை தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில்  நடைபெற்று வருகிறது.

கடந்த ஜூலை மாதம் 9-ந் தேதி விசாரணை நடந்தபோது, சபாநாயகர், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எம்.எல்.ஏ.க்கள், சட்டப்பேரவை செயலாளர் ஆகியோர் 4 வாரங்களில் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். நேற்று இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தபோது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மற்றவர்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.

ஓ.பன்னீர்செல்வம் தனது பதில் மனுவில், ‘ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரு தரப்பாக பிரிந்து இருந்தது உண்மை தான். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கட்சியின் தரப்பில் இருந்து எங்கள் தரப்புக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அதே போல கட்சியின் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டபோதும் எங்களுக்கு அழைப்பு வரவில்லை.

எங்கள் தரப்பின் பங்கேற்பு இல்லாமலேயே பெரும்பான்மை வாக்கெடுப்பில் முதல்-அமைச்சருக்கு 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது. எனவே எங்கள் தரப்பால் அதற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே, கட்சி தாவல் தடை சட்டம் எங்களுக்கு பொருந்தாது. இதனை கருத்தில் கொண்டு சக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

அக்டோபர் 30-ந் தேதிக்குள் சபாநாயகர் உள்ளிட்ட எதிர் பதில் மனுதாரர்கள் பதில் மனுக்களும், அந்த பதில் மனுக்களுக்கு மனுதாரர்கள் விளக்க மனுவும் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணை அக்டோபர் 30-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz