பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்

Saturday 29, September 2018, 15:12:59

நாடு முழுவதும் அன்றாடம் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்தப் போக்கைக் கண்டித்தும், இதற்குக் காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் நேற்று இரவு திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்க திருச்சி மாவட்டச் செயலாளர் மணலி தாஸ் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் கோபிநாத், மக்கள் கலை இலக்கியக் கழக மாவட்டச் செயலாளர் ஜீவா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கம் திருச்சி மாவட்டச் சிறப்பு தலைவர் தர்மராஜ் ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கிப் பேசினார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் எண்ணெய் நிறுவனங்கள் வைக்கும் லாபம், வரியை குறைக்க வேண்டும். இந்தியாவில் எடுக்கப்படும் எண்ணெய் வளங்களை ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும். பொது போக்குவரத்தான ஆட்டோ, கார், பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்க வேண்டும். கார், வேன் மற்றும் சரக்கு வாகனங்கள், லாரிகளை பெரிதும் பாதிக்கும் தனியார் சுங்க வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் சிவா நன்றி கூறினார்.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz