இறந்த ஆய்வாளரின் இறுதி ஊர்வலத்தேரைத் தோளில் சுமந்து சென்ற தர்மபுரி எஸ்.பி.

Sunday 30, September 2018, 12:25:12

நாகை மாவட்டம் வாய்மேடு காவல் நிலையத்தின் ஆய்வாளர் கண்ணையன் தர்மபுரியை அடுத்த குப்பூரைச் சேர்ந்தவர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக விடுப்பில் தனது சொந்த ஊருக்கு வந்த கண்ணையனுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் அவரது உயிர் பிரிந்தது.

ஆய்வாளர் கண்ணையன் இறப்புப் பற்றித் தகவலறிந்த தர்மபுரி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் இறந்த ஆய்வாளருக்கு உடல் நல்லடக்கத்துக்கு போலீஸ் மரியாதையை அளிக்க உத்தரவிட்டார்.

கண்ணையன் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தது நாகை மாவட்டத்தில் என்ற போதிலும் அவரைத் தனக்குக் கீழ்ப் பணியாற்றும் ஆய்வாளரைப் போன்றே கருதிய எஸ்.பி. பண்டி கங்காதர் குப்பூரில் உள்ள ஆய்வாளர் கண்ணையனின் வீட்டுக்கு நேரில் சென்று  அவரது உடலுக்கு இறுதி மரியாதையைச் செலுத்தினார்.

துக்க வீட்டில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த எஸ்.பி. அங்கு அமரக் கூட இல்லை. அலங்கரிக்கப்பட்ட பூந்தேரில் கண்ணையனின் உடல் அடக்கம் செய்ய இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட வேளையில் யாரும் எதிர்பாராத விதமாக எஸ்.பி. பண்டி கங்காதர், இறந்த ஆய்வாளர் கண்ணையனின்  உறவினர்களால் தோளில் சுமந்து செல்லப்பட்ட அந்தத் தேரின் முன்பகுதி மூங்கிலைத் தானும் ஒரு உறவினனாக தோள் கொடுத்து எடுத்துச் சென்றார்.

எஸ்.பி.யின் இந்தச் செயலைப் பார்த்த அங்கிருந்த மற்ற காவல் அதிகாரிகள் ஓடிவந்து, எஸ்.பி.யுடன் சேர்ந்து தாங்களும் அந்த இறுதி ஊர்வலத்தேரைத் தங்களது தோள்களில் சுமந்து சென்றனர். ஏறத்தாழ ஒரு கி.மீ. தூரம் இறுதி ஊர்வலம் சென்றது.

தங்களுக்குக் கீழ்ப் பணியாற்றும் அதிகாரிகளிடம் சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொள்ளும் அதிகாரிகளை நிரம்பப் பெற்றது காவல்துறை. அந்த எண்ணத்தினை மாற்றும் வகையில், ஆய்வாளர் ஒருவரது இறப்பில் நேரில் கலந்து கொண்டு இறுதி மரியாதையைச் செலுத்தியதோடு நில்லாமல், ஒரு உறவினரைப் போல, இறந்தவரின் இறுதி ஊர்வலத் தேரைத் தனது தோளில் சுமந்து சென்ற தர்மபுரி எஸ்.பி. பண்டிகங்காதர் உண்மையாலுமே வித்தியாசமானவர்தான்!

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz