மக்களை மோசடி செய்ததாகப் பிடிபட்ட மக்கள் உரிமை அமைப்பின் மாநில நிர்வாகி !

Tuesday 02, October 2018, 19:20:10

கடந்த 30ந் தேதி தர்மபுரியில் சர்வதேச மக்கள் உரிமைகள் கழகம் என்ற அமைப்பின் மாநாடு நடப்பதாக மிகப் பெரிய அளவிலான பிளக்ஸ் பேனர்கள் தர்மபுரி எங்கிலும் வைக்கப்பட்டன. மாநாட்டின் முக்கியப்  பொறுப்பாளர்களின் படங்கள் அந்தப் பேனர்களில் அச்சிடப்பட்டிருந்தன. அவர்களில் ஒருவராக, இரண்டாண்டுகளுக்கு முன்பு பொதுமக்களிடம் பல லட்ச ரூபாய்களை மோசடி செய்து, தலைமறைவான விஜயலட்சுமி என்பவரின் படமும் இடம் பெற்றிருந்தது.

இவர், காரிமங்கலம், பாலக்கோடு, துரிஞ்சிப்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், குறைந்த வட்டியில் வங்கி கடன் வாங்கி தருவதாக கூறி 1,500 பேரிடம் தலா ரூ.2,500 வீதம் பெற்று மோசடி செய்தவர். இதேபோல, வேலை வாங்கித் தருவதாகப் பலரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால், பணம் கொடுத்தவர்களுக்கு இவர் வேலை பெற்றுத் தரவில்லை. மேலும் பணம் கொடுத்தவர்களுக்கு கடனும் பெற்றுத் தரவில்லை. பணம் கொடுத்தவர்கள் விஜயலட்சுமியை தொடர்பு கொண்டு கேட்டபோது விரைவில் பணம் தருவதாகக் கூறி வந்த அவர் திடீரென ஒருநாள் தலைமறைவாகி, காணாமற் போய் விட்டார்.

கடந்த இரண்டாண்டுகளாக அவர் எங்கிருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது. இந்தக் கால கட்டத்தில் விஜயலட்சுமியிடம் தாங்கள் ஏமாந்தது, தங்களை அவர் மோசடி செய்து தலைமறைவானது குறித்த விரிவான புகார்களை தர்மபுரி மாவட்ட எஸ்.பி. உள்ளிட்டவர்களிடம் பாதிக்கப்பட்ட மக்கள் தந்து தங்களுக்கு நீதி வேண்டிக் காத்திருந்தனர்.

இந்த நிலைமையில், சர்வதேச மக்கள் உரிமைகள் கழகம் வைத்திருந்த மாநாட்டு விளம்பர பேனரில் அந்த அமைப்பின் மாநில இணைச் செயலாளர் என்று விஜயலட்சுமியின் படத்துக்குக் கீழ்க் காணப்பட்ட குறிப்பு  பொதுமக்களைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மாநாடு நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே தங்களிடம் மோசடியில் ஈடுபட்ட விஜயலட்சுமி சர்வதேச மக்கள் உரிமைகள் கழகம் என்ற அமைப்பின் மாநில இணைச் செயலாளராக தர்மபுரியிலேயே மாநாடும் நடத்தப் போவதாக விளம்பரம் செய்துள்ளார் என்பதைக் காவல்துறையின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

மாநாடு நடந்த நாளன்று அதில் பங்கேற்பதற்காக வந்து, மேடையில் அமர்ந்திருந்த விஜயலட்சுமியினை அவர் மீது வந்துள்ள மோசடி புகார்கள் குறித்து விசாரிக்க வேண்டுமென தர்மபுரி B1 காவல்நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர். இதையடுத்து மாநாட்டுப் பந்தலே பெரும் பரபரப்புக்குள்ளானது.

தற்போது போலீசாரால் விசாரிக்கப்பட்டு வரும் விஜயலட்சுமி, தர்மபுரி அருகே உள்ள குண்டலஅள்ளியை சேர்ந்தவர். அங்குள்ள பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்களின் ஆலோசகராகச் செயல்பட்டு வந்தார்.  மேலும் பலரிடம் வேலை வாய்ப்பினைப் பெற்றுத் தருவதாகவும், மான்யக் கடனை வாங்கித் தருவதாகவும் கூறிப் பலரையும் தன் வலையில் விழ வைத்தவர்.

சுமார் நாற்பது லட்ச ரூபாய் வரையில் பொதுமக்களிடம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட விஜயலட்சுமி, இரண்டாண்டுகளுக்கு முன்பாகத் தலைமறைவானவர் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்களால் கூறப்படுகிறது.  தற்போது பிடிபட்டுள்ள விஜயலட்சுமியிடம் அவர் மீதான மோசடிப் புகார்கள் குறித்து போலீசார் விரிவான விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz