முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் சீரமைப்புப் பணிகள் திடீர் நிறுத்தம்

Thursday 04, October 2018, 10:47:38

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் அணையின் 9 மதகுகளில் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ம் தேதி உடைப்பு ஏற்பட்டு இடிந்து விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதனை தொடர்ந்து அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தற்காலிக சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

அணையினை நேரில் பார்வையிட்ட முதல்வர் இன்னும் 4 நாட்களில் உடைப்பிலிருந்து வெளியேறும் நீரைத் தடுத்திடுவோம் என்று கூறிச் சென்று  சுமார் 40 நாட்களுக்கு மேலாகியும் வெளியேறும் நீரினை மாவட்ட நிர்வாகத்தால் இன்னும்  தடுத்து நிறுத்த முடியவில்லை. லட்சக் கணக்கில் மணல் மூட்டைகள் அடுக்கியும், பெரிய பாறாங்கற்களை போட்டும் செய்த முயற்சிகள் எடுபடவில்லை.

கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் காவிரியில் தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றது.  அணை உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் அடுக்கி வைக்கப்பட்ட மணல் மூட்டைகள் சரிந்து விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த இடங்களில் ஆழம் அதிகமாக உள்ளதாலும், தண்ணீர் வேகமாக வெளியேறுவதாலும், தொழிலாளர்கள் இறங்கி வேலை செய்ய தயக்கம் காட்டுகின்றனர்.

இந் நிலையில் நேற்று முன்தினம் மாலை பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் அவதூறாக பேசியதாக கூறி மணல் மூட்டை அடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் திடீரெனத் தங்களது வேலையை பாதியில் நிறுத்திவிட்டு அணையை விட்டு வெளியேறினார்கள். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், தொடர்ந்து அணை சீரமைப்பு பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது.

மாவட்ட நிர்வாகமோ மாற்றுத் தொழிலாளர்களுக்கு ஏற்பாடு செய்தது. மழை வேறு பெய்து வருவதால் ஆற்றின் ஆழத்தினைக் கருத்தில் கொண்டு, அவர்களும் அணையில் இறங்கிட மறுக்க செய்வதறியாது திணறிக் கொண்டிருக்கின்றனர் பொதுப்பணித்துறை அதிகாரிகள்.

இந்தச் சூழலில் பொதுப்பணித்துறையின் காவிரி டெல்டா பாசன பகுதி கூடுதல் செயலாளர் பாலாஜி நேற்று தற்காலிகச்  சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக முக்கொம்புக்கு வந்தார். அப்போது மாற்று தொழிலாளர்கள் மூலம் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி நடந்து வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவரிடம் எடுத்துக்கூறினார்கள் என்றாலும் ஆய்வின்போது ஒன்றிரண்டு தொழிலாளர்களே களத்தில் இருந்தனர்.

ko4

ஆய்வுக்கு பின்னர் காவிரி டெல்டா பாசன பகுதி கூடுதல் செயலாளர் பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கொள்ளிடம் அணையின் தற்காலிக சீரமைப்பு பணிகளை விரைவாக முடிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் 2 வாரங்களில் தற்காலிக சீரமைப்புப் பணி நிறைவடையும். காவிரி கடைமடை பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து உள்ளேன். கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் விவசாயிகள் பயன் அடையும் வகையில் தண்ணீர் கடைமடை பகுதிக்கு சென்று அடையும்’ என்றார்.

முன்னதாக முக்கொம்பில் பாலாஜி விவசாய சங்க தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய பிரிவு தலைவர் புலியூர் நாகராஜன், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விசுவநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் உள்பட விவசாய சங்க தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆற்றில் மணல் அள்ளுவதற்குத் தடை விதிக்க வேண்டும், பாசன வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கரை காவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், வாய்க்கால்களில் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும், கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் விரைவாகச் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும், முக்கொம்பில் ரூ.410 கோடியில் புதிய கதவணை கட்டும் பணியை விரைவாகத் தொடங்க வேண்டும் எனக்கோரி மனு கொடுத்தனர்.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz