தமிழகத்தில் பரவலான மழை - சேலம் மாவட்டப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Thursday 04, October 2018, 10:22:16
தொடர்ந்து 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்யலாம் என்றும், அவற்றுள் சில இடங்களில் மிக கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் முன் கூட்டியே எச்சரித்து இருந்தது. அது போலவே, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. 
 
சென்னையின் பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் அடையாறு , மந்தைவெளி , திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்தது. நள்ளிரவு பெய்த மழையின் தொடர்ச்சியாக இன்று காலை கிண்டி, எழும்பூர், அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
 
இதேபோல சேலம், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, தருமபுரி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், திருவாரூர், ஆகிய  மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது. 
 
சேலத்தில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தர்புரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
சேலம் மாவட்டத்திலும் கனமழையின் காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரோகிணி அறிவித்துள்ளார்.
© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz