தண்ணீர் திறக்கக்கோரி அரியாற்றுக்குள் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

Thursday 04, October 2018, 15:02:14

காவிரியின் 17 கிளை வாய்க்கால்களில் ஒன்றான பழைய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் திருச்சி மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் அல்லித்துறை, தாயனூர், அதவத்தூர், பள்ளக்காடு, சுண்ணாம்புகாரன் பட்டி, கொய்யாதோப்பு ஆகியவை பழைய கட்டளை மேட்டு வாய்க்காலின் கடைமடைப் பகுதிகளாகும். இந்தப் பகுதிகளுக்குக் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை.

கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கடந்த ஆகஸ்டு மாதம் 16-ம் தேதி திருச்சியில் உள்ள பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். கடந்த மாதம் 25-ந்தேதி அதவத்தூரில் உண்ணாவிரதம் இருந்தனர். கடந்த 28-ந்தேதி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். ஆனால், இதுவரை கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை.

இதனால், ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சுமார் 100 பேர் சங்க தலைவர் ம.ப.சின்னத்துரை தலைமையில் அல்லித்துறை- புங்கனூர் இணைப்பு சாலை அருகில் உள்ள அரியாற்றுக்குள் இறங்கினர். காலை 6 மணி அளவில் ஆற்றுக்குள் அமர்ந்த அவர்கள் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள்.  காலை 6 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் இரவு 7 மணிக்கு மேலும் நீடித்தது. அவ்வப்போது லேசாக தூறிய மழையையும் பொருட்படுத்தாது விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர்.

இது தொடர்பாக சின்னத்துரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘பழைய கட்டளை மேட்டு வாய்க்காலின் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வந்து சேராததால் இதுவரை நாற்று நடும் பணியை கூட தொடங்க முடியவில்லை. தண்ணீர் கேட்டு ஸ்ரீரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான வளர்மதியிடம் பல முறை மனு கொடுத்து உள்ளோம்.

மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் நேரில் மனு கொடுத்தும் தண்ணீர் வந்து சேரவில்லை. அதனால் தான் வேறு வழி இன்றி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினோம். பொதுப்பணித்துறை அதிகாரிகள் போராட்டத்தை கைவிடும் படி நேரில் வந்து கேட்டுக்கொண்டனர். ஆனால் நாங்கள் சமாதானம் அடையவில்லை. தண்ணீர் திறந்து விடும் வரை எங்கள் போராட்டம் தொடரும்’ என்றார்.

இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டிருப்பதாகக் கூறிய நிலையில், மாவட்டப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்துவிட உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz