சேலம் அரசுப் பொருட்காட்சி - சில மலரும் நினைவுகள்..!

Thursday 09, August 2018, 21:32:08

சேலத்தில் தற்போது அரசுப் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது..! இந்த ஆண்ட்ராய்டு யுகத்தில் மக்கள் அதை கண்டுகொண்டதாக தெரியவில்லை..!

ஆனால், அரசுப் பொருட்காட்சி எப்போது நடைபெறும் என்று மக்கள் ஏங்கி தவித்த காலம் ஒன்று இருந்தது..! மக்கள் திருவிழா கூட்டம் போல குடும்பத்தோடு அரசுப்பொருட்காட்சிக்கு வருகை தந்து சுற்றி களித்து கொண்டாடிய அந்த கால பொருட்காட்சி மலரும் நினைவுகள் சில...!

கோட்டை மாரியம்மன் ஆடித்திருவிழாவை ஒட்டி 3 மாதங்கள் நடைபெறும் அரசுப் பொருட்காட்சியில் அப்போதைய அரசின் முதல்வர்,அமைச்சர் படங்கள் எங்கும் பிரதானமாக காணப்படும்...!

தனியார் நடத்திய பொருட்காட்சியை, அரசு நடத்த ஆரம்பித்தவுடன் அனைத்து அரசுத்துறைகளும் அரங்கங்கள் அமைத்தன..!

வனத்துறை அரங்கத்தில் நுழையும் போதே ,வனவிலங்குகள் உறுமும் சத்தம் கேட்கும்..! நரி போன்ற சில விலங்குகளை உயிருடன் கூண்டில் வைத்திருப்பர்..! வெளியே டிவியில் காடுகளை பற்றிய படங்களை ஒளிப்பரப்புவார்கள்...!

சுற்றுலாத்துறை அரங்கில் தமிழக சுற்றுலாதலங்களை ஒளி ஒலி காட்சி மூலம் காண்பிப்பார்கள்...! தமிழக சுற்றுலாதல படங்கள் எல்லாம் பார்க்க அழகாக இருக்கும்..!

காவல் துறை அரங்கில் அந்த சமயத்தில் பிரபலமான வழக்குகளில் போலீசு துப்பு துலக்கியதை விளக்கும் ஒளிஒலி காட்சிகள் பார்க்க த்ரில்லிங்காக இருக்கும்..!

சேலம் மாநகராட்சியும் அரங்கம் அமைத்திருக்கும்..!

அரசுத்துறை அரங்கங்களை மக்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று பார்த்து மகிழ்வர்...!

பொருட்காட்சியின் தனிபெரும் சிறப்பே டெல்லி அப்பளமும் ,சூடான மிளகாய்பஜ்ஜியும் தான்...! இவற்றை சாப்பிட்டு மகிழ்வதற்காக பொருட்காட்சிக்கு மக்கள் வருவர்..!

அப்பளமும் கையுமாகவே பொருட்காட்சியினுள் சுற்றி கொண்டிருப்பர்..!

மேட்டூர் மீன் விற்பனை அரங்கில் சூடான பொரித்த மீன் சாப்பிடுவது தனி ருசி...!

டாப்கோ அரங்கில் அவித்த முட்டை,ஆம்லேட் என முட்டை அயிட்டங்கள் பரபரப்பாக விற்பனை ஆகும்..!

ஆவின் பால் கடையில் சூடான சுடுபால் அருமையாக இருக்கும்...!

பஞ்சுமிட்டாய்,கரும்பு ஜீஸ் கடைகளும் உண்டு...!

மேல் மைதானத்தில் மூன்று மீன்கன்னிகள் நீருற்று மின்னொளியில் ஜொலிக்கும்...!

 

திறந்தவெளி திரையரங்கில் தினசரி இரவு ஒரு படம் போடுவார்கள்...! அதற்காக தனி ரசிகர் கூட்டம் வரும்...!

நேரு கலையரங்கில் தினசரி கலைநிகழ்ச்சிகள் களை கட்டும் ..! ஆர்.எஸ்.மனோகர்அவர்களின் 3D சரித்திர நாடகங்கள் ,எஸ்.வி.சேகர்,வில்லன் நடிகர்கள் கண்ணன், ராமதாஸ், குமாரி சச்சு போன்றோரின் நாடகங்களை மக்கள் கண்டு களித்து மகிழ்ந்தனர்..!

பிரபலங்களின் கட்அவுட்,தாஜ மகால் கட்அவுட் உடன் போட்டோ எடுக்க ஸ்டூடியோவும் உண்டு..!

கீழ் மைதானத்தில் குழந்தைகள் குதூகலிக்க குட்டி ரயில் ஓடும்...!

குட்டி ரயில் பப்பூன்களை இன்றும் மறக்க முடியாது...!

இராட்சத ராட்டினத்தில் அமர்வதற்கு தில் வேண்டும்..! ராட்டினத்தில் அமர்த்து உச்சியில் செல்லும் போது அங்கிருந்த பார்க்க சேலம் மாநகரமே கண்கொள்ளா காட்சியாக இருக்கும்..!

பி.சி.சர்க்கார் மேஜிக் ஷோ பார்க்க கூட்டம் அலை மோதும்...! மரணக்கிணற்றில் பைக் ஒட்டும் சத்தம் ஸ்டாலுக்கு வெளியே இருப்பவர்களை உள்ளே வர வைக்கும்...! கடற்கன்னி அரங்கில் உள்ளே செல்லவே பயமாக இருக்கும்...!

சின்னத்திரி கொளுத்தி வைத்தால் நீரில் ஒடும் ஸ்டீம் போட் குட்டிகளுக்குப்  பிடித்த ஒன்று...!

விதவிதமான துப்பாக்கிகள்,மூளைக்கு வேலை வேலை தரும் விளையாட்டு பொம்மைகள் என குழந்தைகளை கவர நிறைய பொம்மை கடைகள்,பெண்களை கவர பேன்சி அணிகலன்கள் விற்பனை செய்யும் கடைகள் எங்கும் நிறைந்திருக்கும்..!

கிஸ்கோ...!,கிஸ்கோ...!,கிஸ்கோ ஊறுகாய்கள் என வரும் ஒலிப்பெருக்கி விளம்பரம் இன்றும் போஸ் மைதானம் பக்கம் செல்லும் போதெல்லாம் மனதில் ஒலிக்கிறது..!

புதுமண தம்பதிகள்,திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்களுக்கு அரசுப் பொருட்காட்சி தந்த அனுபவம் அவர்கள் வாழ்வில் மறக்க மாட்டார்கள்..!

 

பொருட்காட்சியை சுற்றி பார்த்து விட்டு வெளியே வரும் சோப்பு தண்ணியில் கணக்கில்லாத  முட்டை விட்டுகொண்டே அதை விற்பனை செய்து கொண்டிருப்பர்...!

ஒட்டு மீசை விற்பனைக்காரர் தனது ஒட்டு மீசையை விதவிதமாக ஆட்டி அனைவரும் அசத்துவார்...!

அரசுப்பொருட்காட்சியை காணவே உறவினர்கள் ஊரிலிருந்து வருவார்கள்..!

சனி,ஞாயிறுகளில் கூட்டம் கடல் போல இருக்கும்...!

தாத்தா,பாட்டி,அம்மா,அப்பா தம்பி தங்கைகள் உடன் குடும்பமாக,  நண்பர்களுடன் ஜாலியாக மக்கள் திரண்டு வந்து அரசுப்பொருட்காட்சியை கண்டுகளித்த அந்த காலம் ஒரு பொற்காலம்...!

அன்று அரசுப்பொருட்காட்சி எங்களுக்கு தந்த சுகமான அனுபவங்கள்,பொன்னான நினைவுகள் ,ஷாப்பிங் மாலை தேடி ஓடும்,இன்றைய ஆண்ட்ராய்டு இளைய தலைமுறையினர்க்கு கிடைக்காது என்பதே உண்மை

எல்லாம் காலம் செய்யும் கோலம்..

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz