கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதிக்கு ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ரூபாய் 20 இலட்சம் செலவில் வெண்கலச் சிலை அமைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 14ந் தேதி ஊத்தங்கரையில் ஸ்ரீ வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் இம் முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்துப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் மறைந்த தலைவரின் நினைவைப் போற்றிப் பேசினார். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் கருணாநிதி நிறைவேற்றிய நல்ல பல திட்டங்கள் பற்றியும், விரிவாகவும் மன நெகிழ்ச்சியுடனும் அவர்கள் நினைவு கூர்ந்தனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சந்திரசேகர் சிலை அமைப்புக்கான செயல் திட்டங்களை விரிவாக விளக்கியதோடு, இச்சிலை அமைப்புக்கான முழு தொகையையும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரோடு ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி நிர்வாகம் இணைந்து ஏற்றுக் கொள்ளும் எனவும் அறிவித்தார்.
பின்னர் சிலை அமைப்பது குறித்த தீர்மானங்கள் அனைவரின் ஒப்புதலோடு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன. கருணாநிதி சிலை அமைப்புக்காக வித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சந்திரசேகர் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.