பாராளுமன்றம் நடக்கும் போது பிரதமர் மோடி 5 நாட்கள் ‘டூர்’ சென்றுவிட்டார் காங்கிரஸ் விமர்சனம்

Thursday 26, July 2018, 18:56:34

புதுடெல்லி,

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையிலான மோதல் போக்கு தொடர்கிறது.

மத்திய அரசு ரபேல் போர் விமானத்தின் விலை குறித்து ரகசியம் காப்பதுடன், நாட்டு மக்களுக்கு அதை வெளிப்படையாக அறிவிக்காமல் இருப்பது, அதில் தவறு நடந்துள்ளதையே காட்டுகிறது என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.

பா.ஜனதா தொடர்ந்து அதை மறைப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒப்பந்தத்தில் அரசு நிறுவனத்தை புறக்கணித்து விட்டு அனுபவம் இல்லாத தனியார் நிறுவனத்துக்கு விமான பாகங்களை இணைக்கும் ஒப்பந்தம் கொடுத்திருப்பது ஏன் என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்துகிறது. இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசை ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே கடுமையான மோதல் போக்கு நிலவியது. இந்நிலையில் பிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், போஃபர்ஸ் வழக்கில் செய்யப்பட்ட போன்று ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாகவும் உண்மையை கண்டறிய பாராளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும். விமானங்கள் குறைந்த விலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தால், பிரதமர் மோடி அதனை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது சொல்லியிருக்கலாம். இப்போது பா.ஜனதாவிடம் இருந்து வரும் அறிக்கைகள் அனைத்தும் ஊழலை மறைப்பது போன்று உள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது பிரதமர் மோடி 5 நாட்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார். கூட்டத்தை தவிர்க்கலாம். பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பெரும் பலத்தை கொண்டிருக்கும் போது, பாராளுமன்றத்தை தவிர்க்க ஏன் வெளிநாட்டு பயணத்தை தேர்வு செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz