கிருஷ்ணகிரி அருகே பூசாரிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற 1008 பால்குடம் ஊர்வலத்தின் போது அலங்கரிக்கப்பட்ட புஷ்பப் பல்லாக்கில் எழுந்தருளிய பெரிய மாரியம்மனை கர்ப்பிணித் தாய்மார்கள் வடம் பிடித்து இழுத்து அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள பூசாரிப்பட்டி கிராமத்தில் உள்ள பெரியமாரியம்மன் கோவிலில் ஆனி மாத பால்குடம் திருவிழா மற்றும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. பூசாரிப்பட்டி, ஓட்டியூர், கரடியூர், மற்றும் கீழ்க்கரடியூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் இணைந்து நடத்திய இந்த விழாவின் போது அம்மன் நீலவண்ணத்தில் பட்டுடுத்தி அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லாக்கில் எழுத்துருளிய அம்மனை கர்ப்பிணி தாய்மார்கள் வடம் பிடித்து இழுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்
இதனைத் தொடர்ந்து பூசாரிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் வழியாக அம்மன் வீதி உலாவின் போது 1008 பெண்கள் மஞ்சள் பட்டுடுத்தி பால்குடத்துடனும் தீச்சட்டி ஏந்தியும், அம்மன் வேடமணிந்தும் கலந்து கொண்டனர்.
முக்கிய கிராமங்கள் வழியாக சென்ற இந்த பால்குடம் ஊர்வலம் முடிவில் கரடியூர் கிராமத்தில் அமைத்துள்ள பெரிய மாரியம்மன் சிலைக்கு, பால் ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்து பெண்கள் வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் மற்றும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னர், அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்த அம்மனைத் தரிசனம் செய்து வழிப்பட்டனர்.