மதுரையில் அழகிரி ஆலோசனை கூட்டம்: பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு!

Friday 24, August 2018, 15:54:01

செப்டம்பர் 5ம் தேதி சென்னையில், கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்த உள்ளதாக, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்திருந்த நிலையில், தனது ஆதரவாளர்களுடன் இன்று அவர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

திமுகவில் மீண்டும் அழகிரியை சேர்த்துக்கொள்ள ஸ்டாலின் விரும்பவில்லை. எனவே ஸ்டாலினுக்கு, நெருக்கடி அளிக்கும் வகையில் செப்டம்பர் 5ம் தேதி சென்னையில் அமைதிப் பேரணியை நடத்த அழகிரி திட்டமிட்டுள்ளார். அதில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் எனவும் அழகிரி தெரிவித்துள்ளார்.

அமைதிப் பேரணி தொடர்பாகத் தனது  ஆதரவாளர்களுடன் இன்று மதுரையில் உள்ள தனது வீட்டில் அழகிரி முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஒன்றினைக் கூட்டியுள்ளார்.

மதுரையில் டிவிஎஸ் நகரில் உள்ள அழகிரியின் வீட்டில் வைத்து, ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அழகிரியின் ஆதரவாளர்கள் மற்றும் ஸ்டாலின் அதிருப்தியாளர்கள் இதில் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.

ஆனால், இதுதொடர்பான செய்திகளையும், புகைப்படங்களையும் பதிவு செய்ய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் இடத்தை விட்டு பத்திரிகையாளர்களை, அழகிரி ஆதரவாளர்கள், வெளியேற்றி உள்ளனர்.

எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என்றும், அது வெளியே தெரிந்துவிட கூடாது என்பதால் ஊடகங்களை அழகிரி தரப்பு தவிர்ப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதிய ஆட்கள் வராததால்தான் தனது திருமண மண்டபத்தில் நடத்தவிருந்த ஆலோசனை கூட்டத்தை கூட வீட்டிலேயே நடத்திவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

© Copyright 2023 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz