திருச்சி காங்கிரஸ் முட்டல், மோதல்!

Saturday 01, September 2018, 20:55:05

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பதில் கட்சியின் வி.ஐ.பிகளுக்கிடையே முட்டல், மோதல் வெளிப்பட்டுள்ளதாக அக் கட்சி வட்டாரங்களில் பரபரப்பான பேச்சு அடிபடுகிறது.

இது தொடர்பாக நாம் விசாரிக்கையில் நேற்று நடந்த சம்பவம் ஒன்றினைக் கூறி நம்மை அசர வைத்தனர் திருச்சி காங்கிரசார். அந்த சம்பவத்தை அவர்கள் கூறியவாறே இங்கு நாம் விவரித்துள்ளோம்.

திருச்சி திருவரம்பூரில் நேற்று (31.08.18) காங்கிரஸ் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட கூட்டம் நடந்தது. தநாகா தலைவர் திருநாவுக்கரசர் காஞ்சிபுரம் முன்னாள் MP விஸ்வநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

த நா கா தலைவராக திருநாவுக்கரசர் வந்தபின்னர் அவரது அணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு நிறைய செலவுகளை செய்து வருகிறார் முன்னாள் MP அடைக்கலராஜின் மகனான லூயிஸ். முதன் முதலில் திருச்சியில் உண்ணாவிரதம் போட்டபோதும் லூயிஸுக்குத்தான் செலவு.

திருச்சியில் மறைந்த காங்கிரஸ் தொண்டர்கள் மூன்று பேருக்கு தலா ஒரு லட்சம் பணம் கொடுத்து அதையும் காங் தலைவர்கள் கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், சிதம்பரம் கையால் கொடுக்க வைத்தார். ஏதாவது அணிக்கூட்டம் போட வேண்டுமென்றால் அவர்களை திருச்சிக்கு அனுப்பி விடுகிறார் திருநாவுக்கரசர்.

செல்வப்பெருந்தகை எஸ்சி. எஸ்டி பிரிவின் கூட்டம் நடத்த வேண்டும் என சொன்ன போது `திருச்சியில் நடத்துங்கள் லூயிஸ் உதவுவார்' என்று சொன்னார் திருநாவுக்கரசர் . லூயிசையும் அழைத்து `செல்வப்பெருந்தகை கூட்டம் நடத்துகிறார் கொஞ்சம் பாத்துக்குங்க' என்று சொன்னார்.

லூயிசோ `நாமதான் திருச்சியில் MP வேட்பாளராக நிற்கப் போகிறோம்; செலவு பண்ணினால் தப்பில்லை' என்று அந்த கூடடத்துக்கும் செலவு செய்தார். சமீபத்தில் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தையும் திருச்சியில் ஜென்னிஸ் ஹோட்டலில் பிரியாணி விருந்துடன் சிறப்பாக நடத்தினார்.

திருநாவுக்கரசர் எப்போது திருச்சிக்கு வந்தாலும் அவரை வரவேற்கக் கூடிய பதாகைகள் லூயிஸ் செலவாகத்தான் இருக்கும். நேற்றும் பால்பண்ணையிலிருந்து திருவரம்பூர் வரை பதாகைகள் கொடிகள் என ஏகப்பட்ட செலவு செய்திருந்தார்.

நிலைமை இப்படி இருக்க, புதுக்கோட்டை, கந்தர்வக்கோடடை, திருச்சி திருவரம்பூர் பகுதிகளில் தான் சார்ந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வசிப்பதால் திருநாவுக்கரசரே இந்த தொகுதியை குறி வைத்திருக்கிறார் என்பது நேற்று விஸ்வநாதன் பேச்சில் வெளிப்பட்டது.

"இங்கே நடப்பது 40 வது கூட்டம். 40 க்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. 2005ம் ஆண்டு நடந்த தேர்தலில் 40 தொகுதியையும் பிடித்தது நம்முடைய கூட்டணி. திருச்சி திருப்புமுனையாக இருக்கும் என்று சொன்னார்கள் உண்மைதான் திருச்சி தொகுதி நட்ச்சத்திர அந்தஸ்த்து பெற போகிறது" என்று பேசப் பேச, திருநாவுக்கரசர் பதற ஆரம்பித்தார். லூயிசுக்கோ முகம் சிறுத்துப் போய்விட்டது. லூயிஸின் ஆதரவாளர்கள் முகம் வெளிறிப் போனது.

மாநகர் மாவட்டத் தலைவர் ஜவஹர் சாப்பாட்டை கவனிப்பது போல் வெளியேற, ஒவ்வொருவராக கலைய ஆரம்பித்தனர். இந்த நிலையில் இன்று (01.09.18) திருச்சி காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் புலித்தேவன் படத்துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி காலை பத்து மணிக்கு நடக்க இருப்பதால் பரபரப்பாக இருக்கிறது திருச்சி காங்கிரஸ் வட்டாரம்.

-ஷானு-

 

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz